தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஐதராபாத்தில் கடந்த 17-ந்தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து போலீசார் நேற்று காலை அவரை கைது செய்து குண்டு கட்டாக தூக்கி நிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாரை தடுத்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
சந்திரபாபுநாயுடு கைதானதை கண்டித்து நேற்று ஆந்திராவில் தெலுங்குசேம் கட்சி பந்த் நடத்தியது. இதில் ஏராளமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
சந்திரபாபுநாயுடு நிம்ஸ் ஆஸ்பத்திரியில் 10-ம் எண் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை சிகிச்சை பெறமாட்டேன் என்று மறுத்து வருகிறார். திரவ உணவும் உட்கொள்ள மறுக்கிறார். இதனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது.
இன்று காலை டாக்டர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் சந்திரபாபு நாயுடுவை பரிசோதித்தனர். இதில் அவரை மஞ்சள் காமாலை தாக்கி இருப்பது தெரியவந்தது. ஆனாலும் சந்திரபாபுநாயுடு சிகிச்சை பெற மறுத்து வருகிறார்.
அவரது அருகில் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் அமர்ந்து கவனித்து வருகிறார்கள்.
டாக்டர்கள் மற்ற யாரும் சந்திரபாபுநாயுடுவை பார்க்க வரவேண்டாம் என்று கூறி உள்ளனர். இதனால் அவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த தெலுங்குதேசம் முக்கிய பிரமுகர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
சந்திரபாபுநாயுடு அனுமதிக்கப்பட்டுள்ள நிம்ஸ் ஆஸ்பத்திரியை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பலாக திரண்டு வந்த தொண்டர்களை விரட்டி அடித்து வருகிறார்கள்.
ஐதராபாத்தில் அசம்பா விதம் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
0 comments:
Confused? Feel free to ask