Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Tuesday, January 4, 2011

ஓட்டுக்காக இலவச திட்டங்கள்: காய்கறி- வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது; ஜெயலலிதா குற்றச்சாட்டு


Labels:

சென்னை, ஜன.4-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஏழை, எளிய மக்கள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டில் இலவசங்கள் தொடரும் என்று புத்தாண்டு தினத்தன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசி இருக்கிறார். இதை வலியுறுத்தியதன் மூலம், வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அப்பொழுதுதான், சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து, ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்.
 
அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் தன்னிச்சையாக இலவசங்களை கொடுத்துக்கொண்டு வருவது, கைவசம் தங்கத்தை இருப்பில் வைத்துக் கொள்ளாமல் கரன்ஸி நோட்டுக்களை அச்சடிப்பது போன்றது ஆகும். இதன் மூலம் பணத்தின் மதிப்பு, பணம் அச்சடிக்கும் தாளின் மதிப்புக்கு சமமாகக் கூட இல்லாமல் மிகவும் மலிந்துவிடும்.
 
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 90 ரூபாய். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை. அனைத்துக் காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.
 
சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை கிட்டதட்ட ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல். சமையல் எரிவாயு அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 30 நாட்கள் வரை விநியோகம் செய்யப்படுவதில்லை. அந்த அளவுக்கு எரிவாயு பற்றாக் குறை நிலவுகிறது.
 
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம், உத்தேச பயனாளிகளுக்கு இந்தச் சலுகை பயனளிப்பதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக தரப்படுகின்றன.
 
ஆனால் கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவு ஆகிறது.  கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில், கர்நாடகத்திற்கு 911 டி.எம்.சி. அடி தண்ணீரையும், மகாராஷ்டிராவிற்கு 666 டி.எம்.சி. அடி தண்ணீரையும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 1,001 டி.எம்.சி. அடி தண்ணீரையும் பகிர்ந்து அளித்து நீதியரசர் பிரஜேஷ் குமார் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்தத் தாவாவில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களும் இதற்கு முன்பு பெற்றிருந்ததைவிட கணிசமான அளவுக்கு கூடுதலாக நீரைப் பெற இந்தத் தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெறும் 15 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே.
 
முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்த வரையில், பழைய அணையை செயலிழக்கச் செய்து, புது அணையை கட்ட கேரளா தயாராகி வருகிறது. புது அணை கட்டப்பட்ட பிறகு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது.   இலங்கையில், தமிழ் இனத்தின் கணிசமான பகுதி ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது.
 
இன்று கூட கிட்டதட்ட ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய சொந்த மண்ணிலேயே முட்கம்பியால் ஆன வேலிக்கு பின்னால் அகதிகளாக மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
ஆனால், கருணாநிதியோ தன் மகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி, அவர்களை வைத்து இலங்கையில் எல்லாம் சிறப்பாக நடக்கிறது என்று சான்றிதழ் கொடுக்க வைத்தார்.
 
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நாள், பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 comments:

Confused? Feel free to ask

 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz