பெங்களூர், ஜன. 8-
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
வீரர்கள் ஏலம் முறையில் அணிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதால் இந்தப்போட்டிக்கு அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை 3 ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010) ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. 4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ந்தேதி தொடங்குகிறது.
இதில் கூடுதலாக புனே, கொச்சி அணிகள் சேர்க்கப்பட்டுள் ளன. இதனால் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களின் ஒப்பந்தம் முடிந்தது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் விருப்பம் உள்ள வீரர்களில் 4 பேரை நீட்டித்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். அமைப்பின் விதியில் தெரிவிக்கப் பட்டது.
இதன்படி சென்னை அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பிமார்கல் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரும், மும்பை அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், போலாட் (வெஸ்ட் இண்டீஸ்), மலிங்கா (இலங்கை) ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். வார்னே, வாட்சனை ராஜஸ்தான் அணியும், ஷேவாக்கை டெல்லி அணியும், வீராட் கோக்லியை பெங்களூர் அணியும் நீட்டித்துள்ளது. மொத்தம் 12 வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.
4-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடக்கிறது. மொத்தம் 350 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அணியும் 30 வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தொகை ரூ.40.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புதிய அணிகளான கொச்சி, புனே ஆகிய 5 அணிகளும் ரூ.40.5 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். சென்னை, மும்பை அணி ஏற்கனவே தலா 4 வீரர்களை ரூ.20.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து விட்டது. இதனால் அந்த 2 அணி களும் ரூ.20.25 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும்.
ராஜஸ்தான் அணி ரூ.25.6.கோடி வரைக்கும், டெல்லி டேர்டேவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா ரூ.32.4 கோடி வரைக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தம் ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்.
0 comments:
Confused? Feel free to ask