மாத்தூர், ஜன.4-
மருத்துவபடிப்பு நுழைவு தேர்வு ரத்து செய்வது குறித்து டெல்லியில் 3 நாட்கள் ஆலோசனை நடைபெறும் என மத்திய மந்திரி கபில்சிபல் கூறினார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர், லக்னோ, கோழிக்கோடு, இந்தூர், ஷில்லாங் நகரங்களில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ((ஐ.ஐ.எம்.) செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் திருச்சி , ஜார்க்கண்டில் ராஞ்சி, சட்டீஸ்கரில் ராய்ப்பூர், அரியானா ரோடாக் ஆகிய 4 இடங்களில் ஐ.ஐ.எம். தொடங்க இந்திய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகேயுள்ள சூரியூர் கிராமத்தில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல், கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மத்திய இணை மந்திரி புரந்தேஸ்வரி, அமைச்சர்கள் பொன்முடி, செல்வராஜ் கலெக்டர் மகேசன் காசிராஜன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய மந்திரி கபில்சிபல் பேசியதாவது:- இந்திய அளவில் கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர் உள்பட 7 இடங்களில் இந்திய மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் திருச்சி, ராஞ்சி உள்பட 4 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள கல்வியறிவு பெற்ற மாணவர்கள் இளைஞர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. தற்போது இந்திய நாட்டில் மக்கள் தொகை அடிப்படை வசதிகள் என அனைத்துமே பெருகிவிட்டன.
எனவே இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 50 சதவீதம் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்காக உயர்கல்வி நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய மந்திரி கபில்சிபல் பேசினார். பின்னர் மத்திய மந்திரி கபில்சிபல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு நடத்துவது உறுதியாகவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளதே?
பதில்: இந்திய மருத்துவ கழகம் நுழைவு தேர்வு நடத்தும் திட்டத்தை திரும்ப பெற உள்ளதாக செய்திதாள் மூலம் அறிந்தேன். ஏற்கனவே நுழைவு தேர்வு தேவையில்லை என்று சில மாநில அரசுகள் வலியுறுத்தியும் வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கே: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பணம் வாங்கி கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பது பற்றி?
ப: இதை, அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கே: இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு எவ்வளவு நீதி ஒதுக்கீடு செய்யப்படும்?
ப: தமிழகத்தில் திருச்சி உள்பட 4 இடங்களில் ஆரம்பிக்கப்படும் ஐ.ஐ.எம்.முக்கு தலா ரூ.500 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்கள்
கே: ஐ.ஐ.எம்.மில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுமா?
ப: விழா மேடையில் நான் சொன்ன கருத்தை மீறமாட்டேன். ஐ.ஐ.எம்.மில் படிக்க பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தேவையான முயற்சி கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மத்திய மந்திரி கபில்சிபல் கூறினார்.
0 comments:
Confused? Feel free to ask