Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Thursday, June 30, 2011

பிரதமருடன் தயாநிதிமாறன் சந்திப்பு: தயாநிதி மாறன் பதவி விலகல்?

Be the first to comment!
Labels:
புதுடெல்லி, ஜூன்.30-


பிரதமர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று இருக்கும்  நிலையில்  மத்திய  ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

மேலும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படக்கூடும்  என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில்  முன்னாள் தொலைதொடர்ப்பு  அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரத்தை, அமைச்சர்கள் குழுவிடமிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றினார்.


ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை மாற்றியதில் மாறன் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  இந்த விவகாரத்தில் முதலில் அவரைத்தான் தீவிரமாக விசாரிக்க வேண்டும்  என நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி  தெரிவித்துள்ளார்.


2006 -2008 ஆண்டு காலத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்தது. மாறன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன்  குற்றம் சாட்டினார்.

மேலும் இதுகுறித்து 2011 ஜூன் 6-ம்தேதி சிபிஐ  சிவசங்கரனின் வாக்குமூலத்தை பதிவுசெய்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் தவறு ஏதும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே 3-வது குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பற்றி இந்த குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஸ்பெக்ட்ரம் ஊழலை முதன் முதலாக தொடங்கி வைத்த ஒரு முக்கியப் புள்ளி பற்றியும் 3-வது குற்றப்பத்திரிகையில் தகவல்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பெயர் அடிபடத் தொடங்கியதையடுத்து அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய  அமைச்சர் தயாநிதி மாறன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியது முக்கியமானதாக கருதபடுகின்றது.

Tuesday, May 17, 2011

தாம்பரம் படப்பையில் உள்ள நடிகர் வடிவேலு பண்ணை வீட்டில் தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு

Be the first to comment!
Labels:
சட்டமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் பண்ணை வீட்டில் திடீர் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த பண்ணை வீடு தாம்பரம் அருகேயுள்ள படப்பை புஷ்பகிரி பகுதியில் இருக்கிறது. மாமர தோப்புகள் மத்தியில் இவ்வீடு கட்டப்பட்டு உள்ளது. பண்ணை வீட்டில் வேலு என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.இவர் தனது குடும்பத்தினருடன் தோப்பில் தனி வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை இந்த பண்ணை வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்தனர். வீட்டில் 6 கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினார்கள். காவலாளி வேலுவுக்கும் மிரட்டல் விடுத்தனர். அவரிடம் வடிவேலுவின் செல்போன் நம்பரை கொடுக்குமாறு கேட்டனர். அவர் தெரியாது என்றார்.

உடனே மர்ம ஆசாமிகள் வேலுவின் செல்போனை வாங்கி அதில் வடிவேலு நம்பர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அதில் வடிவேலு எண் இல்லாததால் மீண்டும் அதை வேலுவிடம் கொடுத்தனர்.வருகிற சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்து விடவேண்டும். இல்லா விட்டால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டார்கள். இது குறித்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சிறு ஆபரேஷன் மூலம் ரஜினிக்கு நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றம்: குணம் அடைவதாக டாக்டர்கள் பேட்டி

Be the first to comment!
Labels:
சென்னை, மே. 17-

ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

சி.டி. ஸ்கேன் உள்பட பல் வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி இருந்ததால் அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது. காய்ச்சல், சளிக்கும் மருந்து கொடுத்தனர்.

நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறு ஆபரேஷன் மூலம் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

நேற்று ரஜினிக்கு நெஞ்சில் லேசான ஆபரேஷன் நடந்தது. இதன் மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு ரஜினி குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரஜினிக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் மருத்துவ செய்தி குறிப்பில் தெரி உள்ளது.

விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டது.

ரஜினியுடன் வார்டில் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை பற்றி நேற்றும், இன்றும் மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ரஜினி உடல் நிலைபற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு இருந்தனர். சில ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டு வாசலிலேயே காத்து கிடக்கின்றார்கள். ரஜினி வெளியே வந்து தோன்ற வேண்டும் அல்லது வீடியோ மூலம் அவரைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

Be the first to comment!
Labels:
சென்னை, மே.17-

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா நேற்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz