சென்னை:
அதிமுக தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் கடும் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள், 3வது அணி அமைப்பது குறித்து இன்று அவசர ஆலோசனை நடத்தின. மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், சேதுராமன், கிருஷ்ணசாமி, கதிரவன் ஆகியோர் தேமுதிக அலுவலகத்துக்கு சென்று விஜயகாந்த்தை சந்தித்தனர். 3&வது அணிக்கு தலைமை ஏற்குமாறு விஜயகாந்தை அவர்கள் வலியுறுத்தினர். வேட்புமனு தாக்கலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, சமக, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருந்தன. 2006 சட்டசபை தேர்தலில் இருந்தே அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு, இந்த தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் ஆரம்பத்தில் இருந்தே இழுபறி ஏற்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. இது அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிதநேய மக்கள் கட்சி&3, புதிய தமிழகம்&2, சமக&2, பார்வர்டு பிளாக், குடியரசு கட்சி தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்கு பிறகு மார்க்சிஸ்ட்டுக்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. அதிமுகவுக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே ஓரங்கட்டியது.
மதிமுகவுக்கு 2006 தேர்தலி¢ல் 35 தொகுதிகளை வழங்கிய அதிமுக, இம்முறை 8&க்கு மேல் கிடையாது என கூறியது. இதனால் மதிமுக கூடாரமும் அதிர்ச்சியில் உறைந்தது. தொகுதி பங்கீடு முடிந்தாலும் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை அப்படியே ஒதுக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருந்தனர். மதிமுக நிலை குறித்து விவாதிக்க கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தை நாளை மறுநாள் வைகோ கூட்டியுள்ளார்.
இந்நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் குழுக்கள், அதிமுக குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் பேசிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அவசரமாக வெளியிட்டார். தொகுதி பட்டியலை பார்த்ததும் தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளும், தற்போது போட்டியிட விரும்பிய தொகுதிகளும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
தேமுதிக கேட்டிருந்த தொகுதிகளில் 21 இடங்களை அதிமுக பறித்துக்கொண்டதால் அக்கட்சியினர் கொதித்துப் போயுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற 9 தொகுதிகளில் 7 இடங்களை அதிமுக எடுத்துக் கொண்டது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்
பட்டுள்ளனர்.
புதிய தமிழகம் சார்பில் ஓட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் இரண்டை ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த நான்கு தொகுதிகளையும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. இப்படி, கூட்டணி கட்சிகள் கேட்ட எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளதால் அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் அதிமுக கூட்டணியில் இருந¢து தேமுதிக, இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் வெளியேறுவது குறித்து ஆலோசனை நடத்தின. தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் இன்று காலை தீவிர ஆலோசனை நடத்தினார். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டு பிளாக் செயலாளர் கதிரவன் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், 3&வது அணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் தலைவர்கள் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். ஒரு காரில் ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் முதலில் வந்தனர். அவர்களை தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர். ‘தன்மானம் காக்க 3&வது அணி அமைப்போம்’ என கோஷமிட்டனர். அதைத் தொடர்ந்து சேதுராமன், கிருஷ்ணசாமி, கதிரவன் வந்தனர். பின்னர் 5 பேரும் விஜயகாந்துடன் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, 3வது அணிக்கு தலைமை ஏற்குமாறு விஜயகாந்திடம் தலைவர்கள் வற்புறுத்தினர். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.
இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் ஸ்ரீவில்லிபுத்தூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஆலங்குடி உள்ளிட்ட 6 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளிலும் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியுடன் கட்சி நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாமல்தான் இருந்தது. இப்போது அந்த அதிருப்தி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று நடக்கும் அவசர கூட்டத்தில் நல்ல முடிவை எடுப்போம்ÕÕ என்றார்.
தேமுதிக மாநில நிர்வாகி கூறியதாவது: "தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை சமரசம் செய்து கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் நாங்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்தளவு குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதிமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் ஆலோசித்து வருகிறோம். எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம்ÕÕ என்றார். ஒருவேளை மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில், ஏற்கனவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள பா.ஜ., ஐஜேகே, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் அதிமுக அதிருப்தி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவில் மவுனம் + இறுக்கம்
அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெளியேறி, 3&வது அணி அமைப்பது குறித்த ஆலோசனையை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியலே பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுகவிலோ எதுவும் நடக்காததுபோல அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் எதுவும் அதிமுகவால் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக அணியில் முன்னணி தலைவர்கள் இறுக்கத்துடனேயே காணப்பட்டனர்.
3வது அணியில் சேர வைகோவுக்கு அழைப்பு
வைகோ இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விஜயகாந்துடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் வைகோவுடன் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 3வது அணிக்கு வரும்படி அவருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும், 3வது அணி பேச்சில் பங்கேற்க வருவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஜெ. உருவபொம்மை: தேமுதிகவினர் எரிப்பு
தேமுதிக அலுவலகத்தில் இன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். Ôதன்மானம் காக்க தலைமை ஏற்க வா தலைவாÕ, ‘மதியார் தலைவாசல் மிதியாதே’ என்று கோஷம் எழுப்பினர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, தேமுதிக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை கொண்டு வந்து கட்சி அலுவலகம் முன்பு எரித்தனர். அப்போது ஜெயலலிதாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
0 comments:
Confused? Feel free to ask